×

திருச்சி மாநகராட்சியில் முதன்முறையாக அபராதம் வசூலிக்க “டிவைஸ் மெஷின்”: பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை

திருச்சி: பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க, திருச்சி மாநகராட்சியில் முதன்முறையாக அபராதம் வசூலிக்க ``டிவைஸ் மெஷின்’’ வாங்கப்பட உள்ளது என்று மேயர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் துரிதமாக நடந்தது வருகிறது. மேலும், குடிநீருக்காக புதிய பைப் அமைக்கும் பணியும் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் அன்பழகன், கமிஷனர் வைத்திநாதன் ஆகியோர் தினமும் ஒவ்வொரு பகுதி என அதிகாலை நேரங்களில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் திருச்சி மாநகரில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில் “ சர்குலர் வேஸ்ட் “ சொல்யூசன் என்ற தனியார் அமைப்பினர் திருச்சி மாநகராட்சி உழவர் சந்தையில் கடந்த 3ம் தேதி விழிப்புணர்வு மற்றும் கையெழுத்து இயக்கம் நடத்தினர். மேலும் பொதுமக்களிடம் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமை மற்றும் வீட்டில் உள்ள மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த அமைப்பினர் தினமும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், வீட்டில் மக்காத குப்பைகளான பிளாஸ்டிக், தெர்மாகூல் உள்ளிட்ட பொருட்களை வாங்கி அதற்கு 1 கிலோவிற்கு ரூ.12 மற்றும் இரும்பு பொருட்களுக்கு ஒரு கிலோவிற்கு ரூ.30 வீதம் வழங்கி மஞ்சள் பையையும் வழங்கி வருகின்றனர்.மேலும், மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து அபராதம் விதிக்க மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் உத்தரவிட்டுள்ளனர். இதில், நேற்று முன்தினம் மாநகராட்சி ரங்கம், அரியமங்கலம், திருவெறும்பூர், பொன்மலை, கோ.அபிஷேகபுரம் என 5 மண்டலங்கள் சார்பில் அவர்களுக்குட்பட்ட பகுதிகளில் உதவி கமிஷனர்கள் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனை மாநகராட்சியின் முக்கிய பகுதியான ரங்கம் ராஜகோபுரம் பகுதியில் உள்ள கடைவீதி, திருவானைகோவில், பெரியகடைவீதி, சின்னக்கடை வீதி, கள்ளர்தெரு, அல்லிமால் தெரு, மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், காந்திமார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த அதிரடி சோதனையில் கடந்த 3 நாட்களில் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக அபராதம் வசூலிக்கப்பட்டது.துணி பை கட்டாயம்இதுகுறித்து மாநகராட்சி மேயர் அன்பழகன் கூறுகையில்,அரசு உத்தரவை அடுத்து திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கம் விதமாக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமுள்ள பெரியகடைவீதி, காந்திமார்க்கெட் காய்கறிகடை மற்றும் தரைக்கடைகள், பூக்கடைகள், டிபன் கடைகள், ரங்கம், அல்லிமால் தெரு ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை நடத்த உத்தரவிடப்பட்டு அபராதம் வசூலித்து வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து பள்ளி மற்றும பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முதல்முறையாக திருச்சி மாநகராட்சியில் அபராதம் வசூலிக்க டிவைஸ் மெஷின் (Device) வாங்கப்பட உள்ளது. இந்த டிவைஸ் மெஷின் மாநகராட்சி சுகாதார உதவி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும். பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கடைகளிலும் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் கண்டிப்பாக துணி பை கொண்டு வரவேண்டும் என போர்டில் எழுதி வைக்க வேண்டும். மாநகராட்சியில் நிலுவை வரி வசூலிக்க ஒருவார்டுக்கு ஒரு பில்கலெக்டர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு தினமும் நிலுவை வரி வசூலிக்க டார்கெட் நிர்ணயம் செய்யப்பட்டு விரைந்து வரியை வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.



Tags : Trichy Corporation , “Device Machine” to collect fines for the first time in Trichy Corporation: Steps taken to completely eradicate plastic use
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் போட்டி அமமுக...